பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

பெயர் விளக்கம் (03) கலியமூர்த்தி - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் பெயர் கலியமூர்த்தியா இந்தப் பெயருக்குப்  பொருள் தெரியுமா ?

  

தமிழில் கலி என்பதற்கு அம்பு, ஒலி, கடல், கேடு, சனி, சிறுமை, போர், வஞ்சகம், வலி, வறுமை, செருக்கு, எனப் பல பொருள்கள் உள்ளன. ஆர்கலி என்றால் ஆர்ப்பரிக்கும் கடல் என்று பொருள் !

 

திருப்பாற்கடலில் திருமால் பாம்புப் படுக்கை மீது  துயில்  கொள்ளும் நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். கடலில் உறைபவன் என்னும் பொருளில்தான் திருமாலுக்கு கடல்வாணன் என்றொரு பெயருமுண்டு. இதே காரணம் பற்றித்தான் கலியில் ( கடலில் ) உறைபவன் என்ற அடிப்படையில் திருமாலைக் கலியன் என்று அழைக்கலாயினர் !

 

கலியன் அல்லது கலியமூர்த்தி என்று பெயர் சூட்டப் பெற்று இருப்பவர்களில் எத்துணை பேருக்குத் தங்கள் பெயருக்குப் பொருள் புரிந்திருக்கும் என்று சொல்ல இயலாது. ஒவ்வொரு மனிதனும் தங்களது பெயரின் பொருள் என்ன என்பதைப் புரிந்து வைத்திருப்பது நலம் !

 

கலி - கலியன் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றி வழக்கில் இருந்துவரும் பெயர்களையும், அப்பெயர்களை புதுமைப் படுத்திக் கொண்டால் எத்தகைய பெயராக அமையலாம் என்பதற்கான பரிந்துரையும் தரப்படுகிறது !

 

-----------------------------------------------------------------------------

 

               கலியன்...............  =  கடல்வாணன்

               கலியமூர்த்தி.......  =  அலைவாணன்

               கலியபெருமாள்.  =  ஆழியமுதன்

               கலியராஜ் .............. =  கடலரசு


-----------------------------------------------------------------------------

 

கலி எனப்படும் கடலில்  இருவகை அலைகளைக் காணலாம்.  ஆழ்கடலில் அலை மென்மையாக எழுந்து பரவும். கரையோரமாக வரும் அலை சீறலுடன் உயர்ந்து சுருண்டு விழும். தமிழில் திரைஎன்னும் சொல், பிற பொருள்களுடன் அலையையும் குறிக்கும் !


மென்மையாக எழுந்து பரவும் அலையை இளந்திரைஎன்று சொல்லலாம். திருமால்  கடலில் அரவணை மீது துயில்கொள்ளும் இடமும் இளந்திரைஉள்ள இடம் தானே ! இளந்திரைஉள்ள கடலில் அரவணை மீது துயில் கொள்ளும் திருமால் இளந்திரையன்அல்லவோ ?  இளந்திரையன்என்னும் பெயரின் காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?


-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம், (பங்குனி) 14]

{28-03-2022}

--------------------------------------------------------------------------- 

கலியமூர்த்தி

சனி, 26 மார்ச், 2022

பெயர் விளக்கம் (02) பிச்சை - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் பெயர்  பிச்சையா இந்தப் பெயருக்குப்  பொருள் தெரியுமா ?

 

சிவபெருமானில் திருவிளையாடல்கள் பற்றி எத்துணையோ கதைகள் புராணங்களில்  சொல்லப்பட்டுள்ளன.  அவற்றுள்  ஒன்று தான் தண்டகாரண்யத்தில் முனிவர்களின் செருக்கினை அழித்த கதை. தண்டகாரண்யம் என்னும் தபோவனத்தில் பல முனிவர்கள் தமது மனைவியருடன் வாழ்ந்து வந்தனர் !

 

அவர்கள் சிவபெருமானைப் பற்றித் தாழ்வாக எண்ணியதுடன், தம்மைப் பற்றி மிக உயர்வாகவும் கருதி மிகவும் செருக்குற்று இருந்தனர். அவர்களின் செருக்கை அழிக்க எண்ணிய சிவபெருமான் பிச்சைக்காரன் வேடம் பூண்டு அம்மணமாக தண்டகாரண்யம் சென்றார். இவ்வாறு கதை தொடர்கிறது. இறுதியில் முனிவர்களின் செருக்கு சிவபெருமானால் அழிக்கப்பட்டது. . [ செருக்கு = ஆணவம் ]

 

சிவபெருமான் பிச்சைக்காரன் வேடம் தரித்த கதையின் அடிப்படையில் தோன்றிய பல பெயர்கள் மக்களிடையே இன்னும் வழக்கில் உள்ளன. அப்பெயர்கள் பற்றியும் அவற்றுக்கு இணையாக அல்லது பதிலீடாக  முன்மொழியப்படும் தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

 

-----------------------------------------------------------------------------

               பிச்சமூர்த்தி (சிவன்).............. = பேருடையார்

               பிச்சம்மாள் (உமா).................. = மலைமகள்

               பிச்சன் (சிவன்)......................... = பிறைசூடி

               பிச்சாண்டி (சிவன்).................. = பெருந்தேவன்

               பிச்சுமணி (சிவன்)...............= உமாமணாளன்

               பிச்சை (சிவன்).......................= ஆடலரசன்

               பிச்சைக்கண்ணு (சிவன்).= ஆடவல்லான்

               பிச்சைமுத்து (சிவன்).........= மாணிக்கக்கூத்தன்

               பிச்சையப்பன் (சிவன்)..... = கூத்தரசன்

               பிச்சையம்மாள் (உமா)......= மலையரசி

               பிச்சையன் (சிவன்).............= அந்திவண்ணன்

               பிச்சையாண்டி (சிவன்)....= கொன்றைவேந்தன்

               பிட்சாடணன் (சிவன்).........= அழல்வண்ணன்

 

------------------------------------------------------------------------------

[பிச்சமூர்த்தி = பேருடையார். பெருமை + உடையார் =             பேருடையார். பிரஹதீஸ்வரர் = பெருவுடையார் என்பதை         ஒப்புநோக்குக !]

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப்பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 12]

{26-03-2022}

-----------------------------------------------------------------------------

பிச்சை

வெள்ளி, 25 மார்ச், 2022

பெயர் விளக்கம் (01) நரேஷ் - பெயரின் பொருள் என்ன ?

 

உங்கள் பெயருக்கு பொருள் தெரியுமா?

பெயர்கள் : நரேஷ், சுரேஷ், நடேஷ், மாதேஷ், .....இன்னும் பல.

--------------------------------------------------------------------------------------

தமிழில்  ஈசன்  என்று வழங்கும் சொல், சமஸ்கிருதத்தில் ஈஸ்வர் (ஈஸ்வரன்) என்று சொல்லப்படுகிறது.  ஈஸ்வரன்  (ஈசன்) என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அரசன், ஆள்பவன், இறைவன், கணவன், குரு, நாயகன், தலைவன், மூத்தோன், சிவன், திருமால், நான்முகன் என்பவை ஈஸ்வரன் என்பதைக் குறிக்கும் சில சொற்கள். ஈஸ்வரன் என்ற சொல் ஈஸ்வர் என்பதன் விரிவு. காலப் போக்கில் ஈஸ்வர் என்ற சொல் ஈஷ்வர் என்று வலிந்து உச்சரிக்கப்பட்டது.

 

நரன் என்ற சொல்லுக்கு மனிதன் என்று பொருள். மனிதனை ஆள்பவன் ( அரசன் ) என்ற பொருளில்  நரன் + ஈஸ்வர் = நரேஸ்வர்   என்ற சொல் தோன்றியது. பின்பு நரேஸ்வர் என்ற சொல் வலிந்து உச்சரிக்கப்பட்டு நரேஷ்வர் ஆனது. நரேஷ்வர் என்ற பெயர் இன்னும் குறுகி நரேஷ்என்று வழக்கத்தில் இருந்து வருகிறது. இதைப் போன்று தான் இன்னும் பல பெயர்கள் உருவாயின. அவற்றைப் பார்ப்போமா !

 

அமரர் + ஈஸ்வர் = அமரேஷ்வர் - (அமரேஷ்) அம்ரேஷ். (அமரர்களின், அதாவது தேவர்களின்  அரசனாகிய இந்திரன் (விண்ணக வேந்தன்) என்று பொருள். எடுத்துக்காட்டுப் பெயர்:- அம்ரேஷ் பூஜாரி )

 

இந்திரை + ஈஸ்வர் = இந்திரேஷ்வர் - இந்திரேஷ். (இந்திரை = இலக்குமி; இலக்குமியின் கணவனாகிய திருமால்  (மணிவண்ணன்) என்று பொருள்.)

 

உமா + ஈஷ்வர் = உமேஷ்வர் - உமேஷ் ( உமாதேவியின் கணவனாகிய சிவபெருமான் (அழல்வண்ணன்) என்று பொருள்)

 

கணேசன் + ஈஷ்வர் = கணேஷ்வர் - கணேஷ் (பூத கணங்களின் தலைவனாகிய கணேசன் எனப்படும் பிள்ளையார்  (வேழவேந்தன்) என்று பொருள்.)

 

கமலம் + ஈஷ்வர் = கமலேஷ்வர் - கமலேஷ் (கமலம் = தாமரை; தாமரையில் உறைபவன் ஆகிய  நான்முகன் அல்லது தாமரைச் செல்வியாகிய இலக்குமியின் கணவன் (தாமரைச் செல்வன்) என்று பொருள்.)

 

காமம் + ஈஷ்வர் = காமேஷ்வர் - காமேஷ் (காமம் = சிற்றின்பம்;  சிற்றின்பக் கடவுளாகிய  காமன் = கரும்புக் கணையோன் (கன்னலரசு) என்று பொருள்)

 

கிரி + ஈஷ்வர் = கிரீஷ்வர் - கிரீஷ். (கிரி என்றால் மலை. மலையில் உறைகின்ற இறைவன்  சிவன். கிரீஷ்   என்பதற்குச்    சிவன்  (சிலம்பரசு) என்று பொருள். எடுத்துகாட்டுப் பெயர்:- கிரீஷ் கர்நாட் திரைப்பட நடிகர்.

 

கீதை + ஈஷ்வர் = கீதேஷ்வர் - கீதேஷ் ( கீதையின் நாயகனான கண்ண பிரான் (கடல்வாணன்) என்று பொருள் )

 

சதி + ஈஷ்வர் = சதீஷ்வர் - சதீஷ் ( சதி = மனைவி; சதியின் ஈஷ்வரன் = சதீஷ்; மனைவிக்குத் தலைவனாகிய கணவன் அல்லது சதி எனப்படும் பார்வதியின் கணவனாகிய சிவன் (சுடர்வண்ணன்) என்று  பொருள்.) )

 

சீதை + ஈஷ்வர் = சீதேஷ்வர் - சீதேஷ் ( சீதையின் கணவனான இராமபிரான் (எழிலன்) என்று பொருள்.)

 

சுரன் + ஈஷ்வர் = சுரேஷ்வர் - சுரேஷ் ( சுரர் = தேவர் ; தேவர்களின் ஈஷ்வர் ஆகிய தேவேந்திரன் (விண்ணகவேந்தன்)  ( அல்லது சிவ பெருமான் என்று பொருள்.)

 

ஞானம் + ஈஷ்வர் = ஞானேஷ்வர் - ஞானேஷ். ( ஞானம் எனப்படும் அறிவுக்கு அரசன் (அறிவுக்கரசு) அல்லது மனிதனுக்கு ஞானத்தைக் கொடுத்த தலைவனாகிய இறைவன் எனப் பொருள்.)

 

தினம் + ஈஷ்வர் = தினேஷ்வர் - தினேஷ் ( தினசரி உதயமாகி உலகிற்கு ஒளி கொடுத்துக் காத்துவரும் இறைவனாகிய சூரியன் (பரிதி) என்று பொருள்)

 

நடம் + ஈஷ்வர் = நடேஷ்வர் - நடேஷ் ( நடம் = நடனம்; நடனம் ஆடும் ஈஷ்வர் = நடேஷ் = நடேசன் (கூத்தரசன்) (நடனம் ஆடும் இறைவன்)

 

நரன் + ஈஷ்வர் = நரேஷ்வர் - நரேஷ் ( நரன் = மனிதன்: மனிதனின்   ஈஷ்வர் = மனிதனை ஆளும் அரசன் (புவியரசு) அல்லது சிவன் என்று பொருள்)

 

நாகம் + ஈஷ்வர் = நாகேஷ்வர் - நாகேஷ் ( நாகங்களின் தலைவனாகிய நாகராஜன் (அரவரசு) அல்லது நாகத்தை சூடியுள்ள பரமேஸ்வரன் என்று பொருள்)

 

நிதி + ஈஸ்வர் = நிதீஸ்வர் - நிதிஷ். (நிதிக்கு இறைவனாகிய அளகாபுரியின் வேந்தன் [ குபேரன் ] (செல்வப் பெருந்தகை) என்று பொருள். எடுத்துக்காட்டுப் பெயர்:- நிதிஷ்குமார் )

 

பரம் + ஈஷ்வர் = பரமேஷ்வர் - பரமேஷ். ( பரம் எனப்படும் விண்ணுலகின் தலைவனாகிய பரமசிவன் (பிறைசூடி) [ பெருவுடையார் = பேருடையார் ] எனப் பொருள்.)

 

புவனம் + ஈஷ்வர் = புவனேஷ்வர் - புவனேஷ் ( புவனம் எனப்படும் இந்தத் தரணியை ஆளும் அரசன் (புவியரசு) அல்லது  உலகத்திற்குத் தலைவனாகிய இறைவன் என்று பொருள்.)

 

மகா + ஈஷ்வர் = மகேஷ்வர் - மகேஷ் ( மகா = பெரிய ; பெரிய ஈஷ்வர் = மகேஷ்வர்  (பேரரசு) ஆகிய சிவன் என்று பொருள்)

 

மாது + ஈஷ்வர் = மாதேஷ்வர் - மாதேஷ் ( மாது = பெண்: உமா; மாதுவின் ஈஷ்வர் = மாதேஷ் = மாது எனப்படும் உமாவின் கணவனாகிய மலையப்பன் (பூங்குன்றன்) ஆகிய சிவன்.

 

முகம் + ஈஷ்வர் = முகேஷ்வர் - முகேஷ். (முகம் என்பதற்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் வேதம் என்பதும் ஒன்று. வேதத்தின் தலைவன் இறைவன், அதாவது சிவன் (அனலரசு) என்று பொருள். எடுத்துக்காட்டுப் பெயர்:- முகேஷ் அம்பானி.

 

ரமா + ஈஷ்வர் = ரமேஷ்வர் - ரமேஷ் ( ரமா எனப்படும் இலக்குமியின் கணவனாகிய திருமால் (மாலவன்) என்று பொருள்)

 

ராஜா + ஈஷ்வர் = ராஜேஷ்வர் - ராஜேஷ் ( ராஜாவுக்கெல்லாம் ராஜாவாகிய சக்கரவர்த்தி (மன்னர் மன்னன்) என்று பொருள்)

 

லோகம் + ஈஷ்வர் = லோகேஷ்வர் - லோகேஷ் ( உலகத்தின் (லோகத்தின்) தலைவனாகிய அரசன் = புவியை ஆளும் அரசு = (புவியரசு)

 

விமலம் + ஈஸ்வர் = விமலேஷ்வர் - விமலேஷ் ( விமலம் = தூய்மை;  தூய்மையான இறைவன் (தூயமணி) = சிவன் என்று பொருள்.)

 

----------------------------------------------------------------------------

இவற்றுக்கான புதிய தமிழ்ப் பெயர்கள் வருமாறு;-

----------------------------------------------------------------------------


அமரேஷ் = விண்ணரசு [இந்திரன்]

இந்திரேஷ் = கார்வேந்தன் [திருமால்]

உமேஷ் = நடவரசன் [சிவன்]

கணேஷ் = வாரணன் [பிள்ளையார்]

கமலேஷ் = தாமரை மணாளன் [திருமால்]

காமேஷ் = கணையரசன் [மன்மதன்] = கணையரசு

கிரீஷ் = மலையரசு [சிவன்]

கீதேஷ் = மணிவண்ணன் [திருமால்]

சதீஷ் = கொன்றைவேந்தன் [சிவன்]

சீதேஷ் := எழிலன் [இராமன்]

சுரேஷ் = அந்திவண்ணன் [சிவன்]

ஞானேஷ் = அறிவுக்கரசு

தினேஷ் = கதிரவன் [சூரியன்]

நடேஷ் = ஆடலரசு [நடராஜன்]

நரேஷ் = புவியரசு.

நாகேஷ் = (அரவரசு [நாகராசன்]

நிதீஷ் = அளகைவேந்தன் [குபேரன்]

பரமேஷ் =  பேருடையார் [சிவன்]

புவனேஷ் = புவியரசு [அரசன்]

மகேஷ் = பேரரசு [சிவன்]

மாதேஷ் = பூங்குன்றன் [சிவன்]

முகேஷ் = கூத்தரசன் [சிவன்]

ரமேஷ் = மாலன் [திருமால்]

ராஜேஷ் = மன்னர்மன்னன் (சக்கரவர்த்தி)

லோகேஷ் = புவியரசு.

விமலேஷ் = தூயமணி [சிவன்]

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப்பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 11]

{25-03-2022}

------------------------------------------------------------------------------

நரேஷ் (இராஜா)