பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 9 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (07) கிரிராஜ் - பெயரின் பொருள் என்ன ?

கிரிராஜ்உங்கள் நண்பரா ?    இந்தப் பெயரின் பொருள் அவருக்குத் தெரியுமா ?


கிரி என்றால் மலை என்று பொருள். ராஜ் என்பது அரசன் என்பதைக் குறிக்கும். கிரிராஜ் என்றால் மலையரசன் - அதாவது சிலம்பரசன் என்று பொருள். சிலம்பு = மலை !

 

தமிழில் அரசன் என்று நாம் சொல்வதை வடமொழியில் ராஜா என்று சொல்கிறார்கள். ராஜா என்பது, ராஜ், ராஜு என்று திரிபடையும். அரசன் என்ற சொல் சுருக்கமாக அரசு என்றும் வழங்கப்படுகிறது. அரசு அல்லது அரசன் என்ற சொல்லுக்கு மன்னன், வேந்தன், புரவலன், பெருமான், ஏந்தல், பொருநன், குரிசில், கொற்றவன், கோ, இறைவன், அண்ணல், தலைவன், காவலன், செம்மல் என்றெல்லாம் பொருள் உண்டு. இவை மட்டுமன்றி, பூபாலன், நரபதி, சக்கிரி, நிருபன், பார்த்திவன் ஆகிய சொற்களும் அரசனைக் குறிப்பவையே !


சமஸ்கிருதத்தில் உள்ள ராஜ் அல்லது ராஜு என்ற சொற்கள் தனித்து நின்றோ அல்லது வேறு சில சொற்களுடன் இணைந்தோ மாந்தர்களுக்கு விளிப்புப் பெயராகச் சூட்டப்படுகிறது. இவ்வாறு சூட்டப்பெற்று வழங்கிவரும் மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !.


-----------------------------------------------------------------------------

 

அக்னிராஜு (அக்னி = தீ, அனல்)........= அனலரசு

அனுமந்தராஜ் (அனுமன்=கவி)............= கவியரசு

ஆனந்தராஜ் (ஆனந்தம்=மகிழ்ச்சி)..= மகிழரசு

இராமராஜ் (இராமம்=அழகு, எழில்)..= எழிலரசு.

இன்பராஜ் (இன்பம்=மகிழ்ச்சி)...........= மகிழரசு

எத்திராஜ் (எதி=துறவி).............................= துறவரசு

கமல்ராஜ் (கமலம்=தாமரை).................= மலர்மன்னன்

காமராஜ் (காமன்= (மன்மதன்)............= இன்பரசு.

கிரிராஜன் (கிரி = மலை, குன்று).........= குன்றக் குரிசில்

கிருஷ்ணராஜ் (கிருஷ்ணம்=கருப்பு)= மேகவண்ணன்.

குப்புராஜ்  (குப்பம் = சிற்றூர்)...............= சிற்றரசு

குமாரராஜா (குமாரன்= இளையோன்)= இளவரசு.

கோவிந்தராஜ்.................................= கோவேந்தன்

ஞானராஜ் (ஞானம்=அறிவு)................= அறிவரசு.

சிங்கராஜ் (சிங்கம் = அரிமா).............= அரியரசு.

சிவன்ராஜ் (சிவன் = இறைவன்)......= இறையரசு

சின்னராஜ் (சின்ன = சிறிய)..............= சிற்றரசு

சுந்தர்ராஜ் (சுந்தரம் = எழில்)..............= எழிலரசு

சூரியராஜ் ( சூரியன் = ஒளி)................= ஒளியரசு

செல்வராஜ்....................... =செல்வப் பெருந்தகை

சொர்ணராஜ்.....................................= பொன்னரசு

சௌந்தரராஜ் (சௌந்தரம்=அழகு).= அழகரசு.

தங்கராஜ் (தங்கம்=பொன்)...................= பொன்னரசு

தர்மராஜ் (தர்மம் = அறம்).......................= அறவரசு.

தனராஜ் (தனம்= செல்வம், பொன்)..= பொன்னரசு.

தியாகராஜன் (தியாகம்-ஈகம்)............= ஈகவரசு

திருப்பதிராஜு ......................... = திருமலை நம்பி.

தேவராஜ் (தேவர் = வானவர்).......= வானவரேந்தல்.

நடராஜன் (நடம்=நடனம்,கூத்து).= கூத்தரசன்

நம்பிராஜ் (நம்பி = இறைவன்).....= இறையரசு.

நாகராஜ் (நாகம்= அரவம்)..............= அரவரசு.

பட்சிராஜன் (பட்சி = புள்)................= புள்ளரசு

பர்வதராஜன் (பர்வதம்=மலை)...= மலையரசு

பவுன்ராஜ் (பவுன்=பொன்)............= பொன்னரசு

பால்ராஜ் (பால=இளமை)...............= இளங்கோ

பாக்கியராஜ் .......................= செல்வச் செம்மல்.

பாரதிராஜா (பாரதி=கலைவாணி).= கலையரசு

பிரகாஷ்ராஜ் (பிரகாசம் = ஒளி)........= கதிரவன்

பிருதுவிராஜ் (பிருதுவி=புவி).............= புவியரசு

புஷ்பராஜ் (புஷ்பம்=மலர்)...................= மலர்மன்னன்.

பெத்துராஜ் (பெத்த=பெரிய)..............= பேரரசு.

பொன்ராஜ் (பொன்=தங்கம்).............= பொன்னரசு

மகராஜன் (மகா=பெரிய).....................= பேரரசு

மாதவராஜ் (மாதவன்=திருமால்)....= திருமலைமன்னன்

முத்துராஜ் (முத்து = மணி)...................= முத்தரசன்

முருகராஜ் (முருகு = அழகு)..................= அழகரசு

மோகன்ராஜ் (கயற்கொடியோன்)...= கயலரசு

ராஜகோபால்.............................= கோகுலவாணன்

ராஜசிம்மன் (சிம்மம்=சிங்கம்)..= அரிமாவேந்தன்

ராஜமகேந்திரன் (இந்திரன்).........= வானவரேந்தல்

ராஜமார்த்தாண்டன் (.சூரியன்)..= செம்பரிதி

ராஜராஜன் (ராஜவுக்கு ராஜா)...= மன்னர் மன்னன்.

ராஜரெத்தினம் (ரெத்தினம்=மணி)...= மணியரசு

ராஜன் ( அரசன்).........................= கோவேந்தன்

ராஜு................................................=  வேந்தன், அரசு,

ராஜேந்திரன் (வானவர்கோன்)...= விண்ணரசு

ராஜ்...................................................=  அரசு

ரெங்கராஜ் (ரெங்கம்=அரங்கம்). = அரங்கண்ணல்.

லெட்சுமிராஜு ...........................= திருமகள் நம்பி

வனராஜன் (வனம் = கான்)....... = கானரசு

விஜயராஜ் (விஜயம்=வெற்றி).. = வெற்றிவேந்தன்

ஜெயராஜ் (ஜெயம்=வெற்றி)......= வெற்றி வேந்தன்

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2053,மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

-----------------------------------------------------------------------------


கிரிராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக