பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 11 மே, 2022

பெயர் விளக்கம் (16) அய்யாக்கண்ணு - பெயரின் பொருள் என்ன ?

நெற்றிக் கண்ணுடைய சிவன் பெயர்தான் அய்யாக்கண்ணு” !

 -----------------------------------------------------------------------------------

அய்யாக்கண்ணு என்பது என் நண்பரின் பெயர். இது தமிழ்ப் பெயர் தான். இப்பெயருக்குப் பொருள் என்ன ? அய்யன் என்னும் பெயர் சிவனைக் குறிக்கும். சிவனுக்கு நெற்றியில் ஒரு கண் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் !

 

சிவபெருமானின் முகத்திலுள்ள இரு கண்களை விட அவரது நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணுக்குச் சிறப்பு உண்டு. இந்த மூன்றாவது கண்ணுக்கு அறிவுவிழி (ஞானக் கண்) என்று பெயர். இந்த நெற்றிக் கண்ணினால் தான் காமவேள் எரிக்கப்பட்டான். நக்கீரர்  தண்டிக்கப்பட்டார் !

 

அய்யனுடைய (சிவனுடைய) நெற்றிக்கண்ணுக்கு இருக்கும் இந்த சிறப்பினால் தான், அய்யன் + கண் = அய்யன்கண் -அய்யாக்கண் - அய்யாக்கண்ணு என்ற பெயர் தோன்றியது. அய்யாக்கண்ணு என்றால் சிவனின் நெற்றிக்கண் என்று பொருள் !

 

கானக வேடன் தன் கண்களைப் பெயர்த்து, அரத்தம் வழியும் சிவபெருமான் சிலையில் இருந்த கண்களின் மீது அப்பியதால் கண்ணப்பன் என்ற பெயர் தோன்றவில்லை. (நெற்றிக்) கண்ணுடைய அப்பன் (ஐயன்) என்பதால்தான் கண்ணப்பன் என்ற பெயர் வந்தது !

 

அய்யன், கண்ணு என்னும் இரு சொற்களையும் தனித் தனியாகவோ அல்லது அல்லது அவற்றின் இணைவையோ அடிப்படையாகக் கொண்டு உருவான மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அழகிய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

------------------------------------------------------------------------------------

   

       ·         அய்யாக்கண்ணு.....................= அழல்வண்ணன்

       ·         அய்யாச்சாமி............................= அம்மையப்பன்

       ·         அய்யாத்துரை..........................= அருள்நம்பி

       ·         அய்யம்பெருமாள்..................= அம்பலவாணன்

       ·         கண்ணுச்சாமி...........................= கூத்தப்பிரான்

       ·         கண்ணப்பன்..............................= கூத்தரசன்

       ·         கண்ணையன்...........................= பெருந்தேவன்

       ·         சாமிக்கண்ணு..........................= இன்பக்கூத்தன்

       ·         சாமிஅய்யா...............................= பிறைமுடி

       ·         ஞானக்கண்ணு.........................= அறிவுக்கரசு

       ·         முத்துக்கண்ணு.......................= மணிவிழி

       ·         மாரிக்கண்ணு...........................= முகில்விழி

       ·         வைரக்கண்ணு.........................= சுடர்விழி

 

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 28]

{11-05-2022}

-------------------------------------------------------------------------------------

அய்யாக்கண்ணு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக