பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 30 மே, 2022

பெயர் விளக்கம் (29) அருணாச்சலம் - பெயரின் பொருள் என்ன ?


மலை என்னும் சொல் பண்டைக் காலத்திலிருந்தே தமிழில் வழக்கில் இருந்து வருகிறது. “மலை வான் கொள்கஎன உயர் பலி தூஉய்என்பது புறநானூறு (பாடல்:143). ”மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்என்பது குறுந்தொகை (பாடல்:203) !

 

சிலம்பு, வரை, ஓங்கல் போன்ற தமிழ்ச் சொற்களும் மலையைக் குறிப்பனவே. கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர்கள், இராசராச சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக்  காலத்தில் தமிழகத்தில் வடமொழியின் மேலாண்மை தலையெடுக்கத் தொடங்கியது.  மலை என்ற சொல்கிரிஎன்றும்அசலம்என்றும் புதிய உருவில் புழங்கத் தொடங்கின !

 

இதன் விளைவாக மலைகளின் பெயர்களிலும், மலைகளின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டிவந்த மாந்தப் பெயர்களிலும்  கிரி” “அசலம்” ”சைலம்போன்றவை ஒட்டிக்கொண்டன. பழமலை என்னும் பெயர்விருத்தகிரிஆயிற்று. சிவன்மலைதீர்த்தகிரிஆயிற்று !

 

வேங்கடமலை வேங்கடாசலம்ஆயிற்று. மருதமலைமருதாசலம்ஆயிற்று. பொன்மலைசோணாசலம்எனப் புதுப்பெயர் சூட்டிக்கொண்டது. தமிழை அழிக்கும் முயற்சியில் தமிழக மன்னர்களின் துணையை மறைமுகமாகப் பெற்று ஆரியர்கள் முனைப்பாக ஈடுபடலாயினர் !

 

ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பால் இன்று தமிழகத்து மாந்தப் பெயர்களில் 90% அளவுக்கு வடமொழிப் பெயர்களாகவே அமைந்துள்ளன. தமிழகத்து மலைகள் வடமொழிப் பெயர்களால் அழைக்கப்பெறும் நிலை நிலவுகிறது. நீலகிரி, வெள்ளியங்கிரி, தீர்த்தகிரி, கோத்தகிரி, கிருஷ்ணகிரி, சூலகிரி போன்ற பெயர்கள் அவற்றுக்கு எடுத்துக்  காட்டுகள் !


அருணன் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் செந்நிறமான கோள். ஆகையால் அருணமலை என்பது தமிழில் “செம்மலை” என்று  அழைக்கப்பெறும். ஆனால் செம்மலை என்னும் பெயர் நிலைபெறாமல் அருணமலை என்னும் சொல் அருணகிரி என்றும் அருணாச்சலம் என்றும் வடமொழிப் பின்னொட்டுடன் வழங்கப் பெறலாயிற்று !

 

அசலம்அல்லதுகிரிஎன்ற  சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டுள்ள மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கான அழகிய தமிழ்ப்  பெயர்களையும் பார்ப்போமா !

 

------------------------------------------------------------------------------------


அருணாச்சலம் (அருணன்=சூரியன்).= செம்மலை

வேதாச்சலம் (வேதம்=மறை)...............= மறைமலை

சோணாச்சலம் (சோணம்=பொன்)....= பொன்மலை

சேஷாச்சலம் (சேஷன்=இளையோன்)..................= இளங்குன்றன்

தணிகாச்சலம்......................................= தணிகைமலை

வேங்கடாச்சலம் (வேங்கடம்=வடக்குமலை).... = வடமலை

ஸ்ரீசைலம் (ஸ்ரீ = திரு).............................= திருமலை

விருத்தாச்சலம் (விருத்தம்=முதுமை)........... = திருமுதுகுன்றம்

மருதாச்சலம் (மருதம் = மருத மரம்)............... = மருதமலை

இமாச்சலம் (இமம்=பனி)......................= பனிமலை

மந்திராச்சலம் (மந்திரம்= மறை).........= மறைமலை

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

-------------------------------------------------------------------------------------

அருணாச்சலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக