பொருள் புரியாத பெயர்களின் பால் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு !
-----------------------------------------------------------------------------------
தமிழகத்தில் படிக்காத மக்ககளிடம் மூடநம்பிக்கைகள் நிரம்ப இருக்கின்றன;
படித்த மக்களிடம் குறைவாக இருக்கின்றன; அவ்வளவு தான் ! மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது தானே
படித்தவர்களுக்கு அழகு; படிப்புக்கும் அழகு !
படிப்புதான் மனிதனுக்குப் பகுத்தறிந்து அலசும் அறிவைத் தருகிறது. எதிலும் நல்லது, கெட்டது பற்றிய பகுப்பாய்வை அவனால் மேற்கொள்ள முடிகிறது. ஆனாலும் கூட,
சில நேர்வுகளில் எத்துணை அதிகமாகப்
படித்திருந்தாலும் அறிவுக்கு வேலை தராமல் நம்பிக்கைக்கு மட்டும் இடம் தந்து மனிதன்
செயல்படுவதைக் காண்கிறோம். அவன் நம்பிக்கை வைக்கும் எதுவும் அறிவார்ந்த
முடிவுகளுக்கு முரண்படாத வரை அதனால் இடையூறு இருப்பதில்லை ! ஆனால் அவர்களது
நம்பிக்கை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமேயானால், அவை மூடநம்பிக்கைகள் ஆகிவிடுகின்றன !
கற்றறிந்த மாந்தர்களிடம் மூட நம்பிக்கை இருப்பது மக்கள் குமுகாயத்தையே
அழிவுப் பதைக்கு அழைத்துச் சென்றுவிடும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே
நேர்கோட்டில் நிலவு வரும்போது சூரிய மறைப்பு (சூரிய கிரகணம்) ஏற்படுகிறது என்பது
படிப்பறிவுள்ள மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், அந்த நேரத்தில் கற்றறிந்த மாந்தர் சிலர் உண்ணாநிலை மேற்கொள்வதும்,
சூரிய மறைப்பு முடிந்த பின்னர் நீராடி இறைவனை
வழிபடுவதும், மூடநம்பிக்கை அல்லவா ?
ஆங்கிலவழிக் கல்வியளித்தால் தம் பிள்ளைகள் விரைவாக வேலைவாய்ப்பைப்
பெறுவார்கள் என்று கற்றறிந்த பெற்றோர்கள் முற்றிலுமாக நம்புவதும் அதற்காகத் தன்
வருமானத்தில் பெரும் பகுதியை பதின்மப் பள்ளிகளில் கொண்டுபோய்க் கொட்டிக்
கடன்காரர்கள் ஆவதும் மூடநம்பிக்கையன்றி
வேறென்ன ? தமிழ்வழிக் கல்வி தான் பாடங்களை ஐயந்
திரிபறப் புரிந்துகொள்ளவும், இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறவும் உதவும் என்பதை, இவர்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது மூடநம்பிக்கை
அல்லவா ?
இத்தகைய மூடநம்பிக்கைகளில் ஒன்று தான் சில எழுத்துகளை வைத்துக்
கொண்டு குழந்தைகளுக்கு இணையத்தில் பெயர் தேடி அலைவது ! பூசநாளில் (விண்மீன்)
குழந்தை பிறந்திருந்தால், அந்தக் குழந்தைக்கு “ஹூ, ஹே, ஹோ, டா என்ற நான்கு எழுத்துகளில்
ஏதாவதொன்றை முதலெழுத்தாகக் கொண்டுப் பெயர் தேடி அலைகிறார்கள் ! இந்த எழுத்துகளில்
தமிழ்ப் பெயரே இராது. இறுதியில் டாட்டா, டாங்கே, டார்வின் என்று பெயர் வைக்கிறான் தமிழை மறந்த தமிழன் !
படிக்காத மக்கள் யாரும் இப்படிப் பெயர் வைப்பதற்கு அலைவதில்லை.
முன்னோர் பெயரையோ, கடவுள் பெயரையோ சூட்டி விட்டு அவர்கள்
தம் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். படித்த தமிழன் தான், பிறந்த நாண்மீனுக்கு ஏற்பப் பெயர் தேடி இணையத்தில் துழாவி, இறுதியில் பொருளே இல்லாத “ரூமியா”,
”டிம்பிள்”, “துஷி” ”மினிமிடா” என்றெல்லாம் தன் குழந்தைக்குப் பெயர்வைத்துத் தன்னை முட்டாளாக்கிக்
கொள்கிறான் ! மூடநம்பிக்கைக் காரனாகத் தன்னைப் பறை சாற்றிக் கொள்கிறான் !
பிறந்த நாண்மீனுக்கு ஏற்பப் பெயர் வைக்க வேண்டும் என்று நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது ? இதைப் படிக்கும் யாராவது அந்த நூலின்
பெயரைச் சொல்லுங்கள். அப்படி ஒரு நூல் இருந்தால் குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை
ஒளிப்படம் எடுத்துத் தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடுங்கள். அப்படி எந்த நூலிலும் சொல்லப்படவில்லை என்பதே
உண்மை !
சரி ! ஏமலதா, சொர்ணலதா என்றெல்லாம் பெயர் வைத்துக்
கொண்டு இருப்பவர்களுக்கு அதன் பொருள் புரியுமா ? புரியாமல், ஏதோ மூட்டை சுமப்பதைப் போல் அந்தப் பெயர்களைச் சுமந்துகொண்டு
இருக்கிறார்கள். ஏமம் = பொன்; லதா = கொடி; ஏமலதா = பொற்கொடி. பொருள் புரியும் “பொற்கொடியை” விட்டுவிட்டு “பொருள் புரியாத “ஏமலதா” (ஹேமலதா) என்னும் பெயரைச் சூடலாமா ? இஃதுள்பட வேறு சில பெயர்களின் பொருளைப் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
ஹேமலதா (ஏமம் = பொன்)............= பொற்கொடி
ஹேமச்சந்திரன்...............................= பொன்மதி
ஸ்வர்ணலதா (சொர்ணம் = பொன்) ...........= பொற்கொடி
ஸ்வர்ணா..........................................=
பொன்னி
சொர்ணகுமார்.................................=
பொற்செல்வன்
சொர்ணகுமாரி................................=
பொற்செல்வி
புஷ்பலதா (புஷ்பம் = பூ)...................= பூங்கொடி
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
24]
{07-06-2022}
.------------------------------------------------------- ---------------------------
![]() |
சொர்ணலதா |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக