பொருள் புரியாமலேயே
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம் !
குழந்தைகளுக்கு வைக்கபெறும் வடமொழிப் பெயர்களில் பெரும்பான்மையானவை
கடவுள் பெயர்களாகவே இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன காரணம் ? ஆரியர்கள் சமற்கிருதத்தைப் பரப்புவதற்குப் பல சூழ்ச்சிகளைக்
கையாண்டனர். அவற்றுள் ஒன்று தான் மக்களை அச்சப்படுத்தி அவர்களைத் தம்வயப்படுத்தல் !
இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல்,
புயல், வெள்ளம்,
ஆகியவற்றைக் கண்டு பண்டைய மனிதன்
அச்சப்பட்டான். அனைத்தையும் அழிக்கவல்ல தீ (நெருப்பு), நச்சுப் பாம்புகள் ஆகியவையும் அவனை அச்சப்படுத்தின ! அவற்றை
அமைதிப்படுத்தினால், தன்னைத் தற்காத்துக் கொள்ளமுடியும்
என்று அவன் நம்பினான் !
இதன் அடிப்படையில் தோன்றியதே வழிபாடு ! மனிதனுக்குத் துன்பம் தரும்
வல்லமை உள்ளவைகளை வணங்கினால், அவை தமக்குத் துன்பம் விளைவிக்காது
என்று கருதி அவற்றை வழிபடத் தொடங்கினான் !
பண்டைய மக்களிடம் உறைந்து கிடந்த இந்த அச்ச உணர்வை ஆரியர்கள் தமக்கு
வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார்கள். அதுவரை இயற்கையை மட்டுமே வணங்கி வந்த
தமிழ் மக்கள், ஆரியர்கள் கற்பித்த நூற்றுக் கணக்கான கடவுளர்களையும், அவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட வலிமைகளையும் நம்பத் தொடங்கினர்
!
காலப் போக்கில், பல
தொன்மக் (புராணம்) கதைகளையும், மறவனப்புக்
(இதிகாசம்) கதைகளையும் உருவாக்கி, மக்களிடையே அவற்றைப்
பரப்பலாயினர். கதைமாந்தர்கள் பெயர்கள்
அனைத்தையும் வடமொழிப் பெயர்களாவே உருவாக்கத் தொடங்கினர் !
ஆரியர்கள் உருவாக்கிவிட்ட கடவுளர்களை வணங்க வேண்டும் எனவும், இல்லையேல் அவை மனிதர்களை தீங்கு செய்யும் என்றும் கதைகட்டிவிட்டனர்.
கடவுளர்களை அமைதிப்படுத்த அவற்றுக்கு உணவுப் படையல் முதல் உயிர்ப் படையல் வரை
செய்யவேண்டும் எனவும் கற்பித்தனர் !
கடவுள் பெயர்களை மனிதர்களுக்கு வைத்துக் கொண்டால், அவர்களைத் துன்பங்கள் அணுகா என்னும் தன்னல அடிப்படையில், மனிதர்கள் கடவுள் பெயர்களைச் சூட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள்.
ஆரியர்கள் உருவாக்கிய அனைத்துக் கடவுள் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே
இருந்தமையால், இக்காலத்திம் நாம் காணும் மாந்தப்
பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருக்கக் காண்கிறோம் !
மனிதர்கள் தன் மனைவி மக்கள் மீது வைத்திருக்கும் இயற்கையான பற்றின்
(பாசம்) காரணமாக, அவர்களது நலனுக்காக என்று சொல்லி யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்; நம்புகிறார்கள் ! எந்தக்
கோயிலுக்குப் போகச் சொன்னாலும் போகிறார்கள்; எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை அப்படியே
ஏற்று, இணையத்தில்
பெயர் தேடி உலவுகிறார்கள் !
தான் செய்வது சரியா தவறா என்று எந்த மனிதனும் சிந்திப்பதே இல்லை !
இப்படித்தான், ஆரியர்களின் கான்முளையான
பார்ப்பனர்களும், வயிற்றுப் பிழைப்பிற்காக ஏமாற்றித்
திரியும் கணியர்களும் (சோதிடர்) மனைக் கணியர்களும் (வாஸ்து) வடமொழியின் முகவர்களாக
மாறித் தமிழ்நாட்டில், தமிழை வீழ்த்திக் கொண்டிருக்கிறாரகள் !
சரி ! ”மதுரபாஷினி” என்று தன் மகளுக்கு ஒரு தமிழாசிரியர் பெயர் வைத்திருப்பதைக் கண்டு வியந்து போனேன் ! இதற்குப் பொருள் என்ன ? மதுரம் என்றால் இனிமை; “பாஷினி” என்றால் “மொழிபவள்” ; (பாஷை > பாஷினி) எனவே ”மதுரபாஷினி” என்றால் “இன்மொழி” என்று பொருள்.
இவர் போன்ற தமிழாசிரியர்கள் தான் இன்று தமிழ்நாட்டில் தமிழுணர்வு
குறைந்து போனமைக்குக் காரணம் ! “மதுரம்” தொடர்புடைய வேறு சில பெயர்களைக் காண்போமா ? தமிழில் மது என்னும் சொல்லுக்கு இனிமை, தேன், கள், அமுது, நீர், பால், இளவேனில் என்றெல்லாம் பொருள் உண்டு.
------------------------------------------------------------------------------------
மது.........................= தேன்
மதுமதி.................= தேன்மதி
/ இன்மதி
மதுபாலா.............= இளவேனில்
மதுரம்...................= தேன்மொழி
மதுரபாஷினி.......= இன்மொழி
மாதுரி....................= அமுதமொழி
மாதுரி தேவி..........= தமிழமுது
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:2053, விடை (வைகாசி)
25]
{08-06-2022}
-----------------------------------------------------------------------------------
![]() |
மதுரபாஷினி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக